ADDED : ஜூலை 17, 2026 07:01 PM
புதுச்சத்திரம்: சிதம்பரம் அருகே வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வாண்டையாம்பள்ளத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவியரசன், 32; டிப்ளமோ படித்து முடித்து, வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர், அங்கிருந்து திரும்பி வந்து, கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:35 மணிக்கு ஸ்கூட்டியில், பெரியப்பட்டிலிருந்து காய்கறி வாங்கிக்கொண்டு, வாண்டையாம்பள்ளம் சென்றபோது ஆண்டார்முள்ளிப்பள்ளம் அருகே, பைக்கில் வந்த நபர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பி சென்றார்.
இதில் படுகாயமடைந்த கவியரசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்கு விரைந்த போலீசார், கொலையாளி விட்டு சென்ற பைக், மொபைல் போனை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
அந்த பைக், மொபைல் போன் இரண்டும் வாண்டியாம்பள்ளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டனுடையது என்பது தெரிந்தது.
இதுகுறித்து புதுசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, கொலையாளியை தேடிவந்தனர். இந்நிலையில், கொத்தட்டை டோல்கேட் அருகே, பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, மணிகண்டன் மனைவிக்கும், கவியரசனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கவியரசனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் மணிகண்டனை, 36; கைது செய்து, கடலூர் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
