/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரியில் தீ; கடலுாரில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
/
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரியில் தீ; கடலுாரில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரியில் தீ; கடலுாரில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரியில் தீ; கடலுாரில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
ADDED : மார் 15, 2025 12:53 AM

கடலுார்; கடலுார், சுத்துக்குளத்தில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
சீர்காழியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் 21,000 லிட்டர் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சீர்காழி, புதுத்துறையைச் சேர்ந்த கங்காதரன்,49; லாரியை ஓட்டினார்.
கடலுார், முதுநகர் சுத்துக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் நள்ளிரவு 11:30 மணிக்கு லாரி வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மீன் லாரி மீது மோதியதுடன், அருகில் உள்ள கடை மீதும் மோதி நின்றது.
கடையில் மோதிய வேகத்தில் டேங்கர் லாரி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீ மளமளவென பரவி அருகில் நின்ற மீன் லாரி, பைக் மற்றும் 3 கடைகளுக்கும் பரவியது.
தகவலறிந்த கடலுார், சிப்காட், புதுச்சத்திரம், நெல்லிக்குப்பம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் லாரி, பைக், கடை எரிந்து சேதமானது. எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
இந்த விபத்தில் தீக்காயமடைந்த டிரைவர் கங்காதரன் மற்றும் லாரி மோதிய கடையில் பணிபுரிந்த சூர்யா,27; உட்பட 3 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
முதுநகர் போலீசார், கடலுார்-விருத்தாசலம் சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தி மாற்று வழியில் செல்ல நேற்று மதியம் வரை ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. மின் ஒயர்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.