/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் நெடுஞ்சாலையை தோண்டி கொடி கம்பம்; உதயநிதியை வரவேற்க தி.மு.க.,வினர் அடாவடி
/
விருதையில் நெடுஞ்சாலையை தோண்டி கொடி கம்பம்; உதயநிதியை வரவேற்க தி.மு.க.,வினர் அடாவடி
விருதையில் நெடுஞ்சாலையை தோண்டி கொடி கம்பம்; உதயநிதியை வரவேற்க தி.மு.க.,வினர் அடாவடி
விருதையில் நெடுஞ்சாலையை தோண்டி கொடி கம்பம்; உதயநிதியை வரவேற்க தி.மு.க.,வினர் அடாவடி
ADDED : மார் 31, 2024 04:50 AM

விருத்தாசலம், விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த உதயநிதியை வரவேற்க, தி.மு.க.,வினர், நெடுஞ்சாலையில் 1 கி.மீட்டர் துாரத்திற்கு பள்ளம் தோண்டி வரிசையாக கொடிகளை கட்டினர்.
கடலுார் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, விருத்தாசலத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று மாலை பிரசாரம் செய்தார். அவரது வருகையையொட்டி, உளுந்துார்பேட்டை - விருத்தாசலம் சாலையில், புதுக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல் பஸ் நிலையம், பாலக்கரை ரவுண்டானா என, பிரதான பகுதிகளில் 1 கி.மீ., துாரத்திற்கு, வழி நெடுகிலும் தி.மு.க., கொடிகள் வரிசையாக நடப்பட்டன.
இதற்காக, டிரில்லர் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலை தார் சாலையில் பள்ளம் தோண்டி, கட்சிக் கொடிகளுடன் உள்ள இரும்பு பைப்புகள் நட்டனர்.
சென்னை-கன்னியாகுமாரி தொழிற்தட சாலையான இச்சாலை, உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரையில் 22 கி.மீ., துாரத்திற்கு, ரூ. 136 கோடியில் கடந்தாண்டுதான் போடப்பட்டது. அதற்குள் சாலையை பள்ளம் தோண்டி, அரசியல் கட்சிகள் நாசம் செய்வது, பொதுமக்களை முகம் சுளிக்க செய்தது.
சாலையில் தோண்டப்படும் பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கினால் பள்ளங்கள் பெரியதாகி குண்டும் குழியுமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை நாசமாகும்.
மேலும், விருத்தாசலத்தில் 1 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக தி.மு.க., காங்., உட்பட அதன் கூட்டணி கட்சிகளின் கொடிகள் நடப்பட்டதாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை பள்ளிக்கரணையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் சரிந்து விழுந்ததில் பலியானார். இதுகுறித்து சமூக ஆர்வலர் தொடர்ந்த பொதுநல வழக்கின் பேரில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சட்டவிரோத பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க மாட்டோம் என ஐகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, அமைச்சர் உதயநிதி வருகைக்காக விதிகளை மீறி கொடிகள் நடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ராமதாஸ் வருகையின்போதும் சென்டர் மீடியன்கள், பாலங்களில் பா.ம.க., பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

