/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்தி பூஜை பொருள் விற்பனை 'ஜோர்'
/
விநாயகர் சதுர்த்தி பூஜை பொருள் விற்பனை 'ஜோர்'
ADDED : செப் 07, 2024 06:53 AM

கடலுார் : கடலுாரில் விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் விற்பனை விறு விறுப்பாக நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகளில் சிறிய அளவிலும், பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை நடைபெறுவது வழக்கம். மூன்று அல்லது 5வது நாளில் சிலைகள் நீர் நிலைகளில் கொண்டு கரைக்கப்படும். கடலுார் முதுநகரில் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விநாயகர் சிலைகள் நேற்று வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.
கடலுார் உழவர் சந்தை, மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூஜைப் பொருட்கள் வாங்க கடை வீதியில் மக்கள் குவிந்தனர். 200 ரூபாய்க்கு விற்பனையான வாழைத்தார் 400 ரூபாய்க்கு விற்பனையானது.
கடலுார் உழவர் சந்தையில் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் அடங்கிய 1 செட் 150 ரூபாய்க்கு விற்பனையானது. பொரி, அவுல், கடலை உள்ளிட்ட பொருட்களையும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோன்று, கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் வழக்கத்தை விட அதிகளவில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. அரும்பு ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், குண்டு மல்லி 1,000, கனகாம்பரம் 1,200, சாமந்தி 300 ரூபாய்க்கும் விற்பனையானது.