/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
/
குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
ADDED : பிப் 27, 2025 09:13 AM
திட்டக்குடி; திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம், தெற்கு காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள போர்வெல் மோட்டார் கடந்த 3 நாட்களுக்கு முன் பழுதானது.
அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழுதான மோட்டாரை சீரமைக்கக்கோரி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:30 மணியளவில் அவ்வழியே வந்த டவுன் பஸ்சை (தடம் எண் - 4) சிறைபிடித்து, நாவலுார் - ஆவினங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆவினங்குடி போலீசார், ஊராட்சி செயலர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமாதானம் செய்து, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று காலை 9:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.