/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனையில் நலச்சங்க ஆய்வு கூட்டம்
/
அரசு மருத்துவமனையில் நலச்சங்க ஆய்வு கூட்டம்
ADDED : மே 26, 2024 05:42 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று ஆய்வை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், ரோகி கல்யாண் சமித்தி திட்டத்தின் கீழ் நோயாளர் நலச்சங்கம் சார்பில் ஆண்டு கூட்டம் நடந்தது. முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ரத்த வங்கி மருத்துவர் குலோத்துங்கசோழன், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் நவநீதம், தமிழரசி, சந்திரவடிவு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த் ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டில் விருத்தாசலம் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற்றுள்ளது. தொடர்ந்து, 2022 - 23ம் ஆண்டிற்கான தரச்சான்றுக்கு வரும் ஜூன் 2ம் தேதி ஆய்வு நடக்கிறது. அதனை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், அரசு மருத்துவமனையில் தற்போது லேப்ராஸ்கோப் முறையில் குடல்வால்வு, பித்தப்பை அகற்றம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இதனுடன் 'வெசல் சீலர்' என்ற கருவியை பயன்படுத்தினால் ரத்தக்கசிவை தடுத்து நிறுத்த முடியும். அப்போது, கர்ப்பப்பை அகற்றம் போன்ற குடல் பாதிப்பு தொடர்பான அனைத்து வித அறுவை சிகிச்சைகளையும் செய்ய முடியும்.
அதுபோல், மூன்று மாதங்களில் 12 தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டுவட அறுவை சிகிச்சை உபகரணங்களை கூடுதலாக வாங்கினால், மேலும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும்.
தற்போது, 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு நிபுணர் இல்லாமல், மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், இருதய நோய் நிபுணர் ஒருவரை பணியமர்த்த வேண்டும். லோக்சபா தேர்தல் முடிந்ததும், உபகரணங்கள் வாங்குவது மற்றும் இருதய நோய் நிபுணர் தேவை தொடர்பான அறிக்கை தயாரித்து, அரசுக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டது.