ADDED : ஆக 05, 2026 03:50 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நெஞ்சுவலியால் அவதிப்பட்டவரை உரிய நேரத்தில் காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு விழா நடந்தது.
விருத்தாசலம் பாரதி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் கபிலன்,22; ஆட்டோ டிரைவர். இரு வாரங்களுக்கு முன், நள்ளிரவில் பஸ்சில் மனைவியுடன் வந்த 50 வயதுள்ள நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார். உடனடியாக கபிலன், இருவரையும் தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்று மின்னல் வேகத்தில் சென்று, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து, அவரை காப்பாற்றினார்.
மனித நேயத்துடன் செயல்பட்ட கபலனுக்கு, விருத்தாசலம் அரிமா சங்கம் பாராட்டு விழா நடத்தியது. ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் ஆட்டோ டிரைவர் கபிலனுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்தினார்.
வர்த்தகர் சங்க பொருளாளர் சேட்டு முகமது, அரிமா சங்கத் தலைவர் ரஞ்சித்குமார், செயலாளர் ஆனந்தராஜ், மெடிக்கல் ஸ்ரீதர், சந்திரசேகரன் உடனிருந்தனர்.
