/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நம்ம டாய்லெட் திட்ட கழிவறை பூட்டி கிடக்கும் அவலம்
/
நம்ம டாய்லெட் திட்ட கழிவறை பூட்டி கிடக்கும் அவலம்
ADDED : மே 24, 2024 05:31 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விருத்தாசலம் பஸ் நிலையம் வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான பஸ்கள் செல்கின்றன. குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும், திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களுக்கும் பஸ்கள் செல்கின்றன.
தினசரி ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 12 லட்சம் ரூபாயில் நம்ம டாய்லெட் திட்டத்தில் நவீன வசதிகளுடன் கழிவறை கட்டப்பட்டது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில், ஓரிரு மாதங்களே பயன்பாட்டில் இருந்த கழிவறைகள்பராமரிப்பின்றி பாழானது.
துர்நாற்றம் வீசியதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதால் பயணிகள் புறக்கணித்தனர். அதைத் தொடர்ந்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக கழிவறைகள் பூட்டியே கிடப்பதால், மக்கள் வரிப்பணம் பாழாகும் அவலம்ஏற்பட்டுள்ளது.
எனவே, நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகளை புனரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.