ADDED : ஜூலை 30, 2026 04:41 PM
பண்ருட்டி: ஆரம்ப சுகாதார செவிலியரை ஆபாசமாக திட்டியவரை போலீசார் கைது செய்தனர்.: காடாம்புலியூர் சமத்துவபுரம், செவ்வந்தி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் நரசிம்மன்,26; நேற்று மாலை இவரது கை விரலில் தீக்காயம் ஏற்பட்டது. உடன் அவர், சிகிச்சைக்காக காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்த பின், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் மருந்தை ஊற்றிய செவிலியர் மோனிஷா, மருந்தை காயம்பட்ட இடம் முழுவதும் தடவுமாறு நரசிம்மனிடம் கூறினார்.
அதற்கு நரசிம்மன் ஏன் நீ தடவ மாட்டாயா என கேட்டு ஆபாசமாக திட்டினார். அதனை கண்டித்து ஊழியர் ரேணுகாவையும் ஆபாசமாக திட்டி, இருவரையும் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தார்.
இதுகுறித்து சுகாதார நிலைய டாக்டர் அரவிந்த்,46; அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, நரசிம்மனை கைது செய்தனர்.
