/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாய் அடித்து கொலை; மகனுக்கு ஆயுள் தண்டனை
/
தாய் அடித்து கொலை; மகனுக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 25, 2025 07:09 AM

கடலுார்; நெய்வேலியில் மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் மகிளா கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி, பிளாக் - 21, பூம்புகார் சாலையை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பவுனம்மாள்,60; இவரது மகன் தேவன்ராஜ் 42; மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
மது குடிப்பதற்கு தனது தாயிடம் அடிக்கடி பணம் கேட்டதால், தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 4.12.2022ம் தேதியன்று மது குடிப்பதற்கு பணம் தராததால், ஆத்திரமடைந்த தேவன்ராஜ், பவுனம்மாளை தாக்கினார்.
தடுக்க வந்த அக்கா சுசீலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பவுனம்மாள் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, மறுநாள் இறந்தார்.
புகாரின்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து தேவன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று தீர்ப்பு கூறினார்.
தாயை கொலை செய்த தேவன்ராஜ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஜெயச்சந்திரன் ஆஜரானார்.

