/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நவீன தொழில்நுட்பத்தில் புதிய மேம்பாலம் பணி
/
நவீன தொழில்நுட்பத்தில் புதிய மேம்பாலம் பணி
ADDED : மார் 15, 2025 12:52 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் புறவழிச்சாலை மணிமுக்தாற்றில் நவீன தொழில்நுட்ப முறையில் மேம்பாலத்தில் ராட்சத கிரேன்கள் உதவியுடன் மேல்தளம் பொறுத்தும் பணி துவங்கியது.
விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை 67 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலை விரிவாக்கம் செய்து, மணிமுக்தாற்றில் கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப முறையில், ஆற்றில் பில்லர்கள் மட்டும் கட்டி, அதன் மேல்தளங்கள் (ஸ்பேன்கள்), புறவழிச்சாலையின் ஒரு பகுதியில் தனியாக தயாரித்து, அழுத்தம் முறையில், ஸ்டெரிங் தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிறது. இப்பணியில் முதற்கட்டமாக ஒரு மேல்தளம் நேற்று பொறுத்தப்பட்டது.
அதன்படி, 30.5 மீட்டர் நீளத்தில், 60 டன் எடையுடைய மேல்தளம், இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் துாக்கி, டிரெய்லர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டு, பில்லருடன் இணைக்கும் பணி நடந்தது. இதனை, கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, உதவி கோட்டப் பொறியாளர் வசந்தபிரியா பார்வையிட்டனர்.
வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்ததும், எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் எளிதில் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பணிக்காக, சேலம் புறவழிச்சாலையில், கோ.பொன்னேரி ரவுண்டானா முதல் சித்தலுார் ரவுண்டானா வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.