ADDED : மே 16, 2024 11:35 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றியும், வெயில் தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி அக்னி வெயில் துவங்கியது முதல் 100 டிகிரி அளவில் வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மாவட்டத்தில் கடந்த வாரம் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தபோதும், வெயில் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துவங்கி, காலை வரையில் அடுத்தடுத்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் அக்னி வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலுார் மட்டுமின்றி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், வடலுார், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையில் தண்ணீர் ஓடும் அளவிற்கு மழை பெய்தது.

