/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை மணிமுக்தாற்றில் மாசி மகம்; தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
/
விருதை மணிமுக்தாற்றில் மாசி மகம்; தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
விருதை மணிமுக்தாற்றில் மாசி மகம்; தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
விருதை மணிமுக்தாற்றில் மாசி மகம்; தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
ADDED : மார் 13, 2025 12:39 AM

விருத்தாசலம் : மாசி மகத்தையொட்டி, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்வாக, நேற்று மாசி மக உற்சவம் விமர்சையாக நடந்தது. 'காசியை விட வீசம் பெருசு, விருத்தகாசி' என்ற ஆன்மிக பெயருடைய விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வேண்டினால், காசிக்கு சென்று வந்த புண்ணியத்தை விட பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு 1:00 மணி முதல், மணிமுக்தாற்றில் நீராடி, பச்சரிசி, அகத்திக்கீரை, வெல்லம், எள் உட்பட பல்வேறு காய்கறிகளை தானமாக வழங்கி, தர்ப்பணம் கொடுத்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக பாலக்கரை, கடைவீதி ரவுண்டானா மற்றும் வேப்பூர், பெண்ணாடம் மார்க்கத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், உணவு வழங்கப்பட்டது.
டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.