ADDED : ஜூலை 23, 2026 07:21 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் மணிமுக்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரேமலதா எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகம் முன் உள்ள பயணியர் நிழற்குடை கடந்த 2007ம் ஆண்டு விஜயகாந்த் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது கட்டி திறக்கப்பட்டது.
இந்நிலையில், பயணியர் நிழற்குடை பழுதடைந்ததால், தற்போது புனரமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு, பிரேமலதா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.
அதன்பின், எம்.எல்.ஏ., அலுவலகத்தில், வருவாய்துறை, நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களிடம் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்பின், மணிமுக்தாறு, பெரியகண்டியங்குப்பம் குப்பை கிடங்கு, செம்பளக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில் கூட்டம் நடத்தி, கிராம மக்களிடம் மனுக்களை பெற்றார்.
அதன்பின், கோ.பவழங்குடி அரசு உயர்நிலை பள்ளியில் கட்டப்படும் புதிய வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டு, கட்டுமான பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, தே.மு.தி.க., மாவட்ட செயலர் சிவக்கொழுந்து, துணை செயலர் வேல்முருகன், நகர செயலர் ராஜ்குமார், தலைவர் சங்கர், பொருளாளர் கருணா, செயற்குழு ரமேஷ், பாலா, இளங்கோ உட்பட பலர் உடனிருந்தனர்.
