/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தலைமையின்றி தள்ளாடும் வட்டார போக்குவரத்து அலுவலகம்
/
தலைமையின்றி தள்ளாடும் வட்டார போக்குவரத்து அலுவலகம்
தலைமையின்றி தள்ளாடும் வட்டார போக்குவரத்து அலுவலகம்
தலைமையின்றி தள்ளாடும் வட்டார போக்குவரத்து அலுவலகம்
ADDED : ஆக 28, 2024 04:14 AM
கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கடலுார், சிதம்பரத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையிலும், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஆய்வாளர் (கிரேடு 1) தலைமையிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில், 15க்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் உள்ளன. இவர்கள்தான், டிரைவிங் லைசன்ஸ், சாைல வரி, பஸ் உள்ளிட்ட வரிகள் செலுத்தவும், தகுதி சான்றிதழ் பெறுவதற்கும் அலுவலகத்திற்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒராண்டிற்கு முன்பு மறைமுக புகாரின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.
அதனால் அதிகாரிகள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டது. கடலுாருக்கு சென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையில் காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதனால் பல முறை நியமித்தும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைநகர் கடலுாருக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த ஓராண்டாக வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிடம் காலியாகவே உள்ளது.
மற்ற பணிகளை ஆய்வாளர்கள் வழக்கம்போல் செய்து வருகின்றனர். சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் கடலுாருக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, அலுவலகம் தலைமை இல்லாததால் கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், ஒத்துழையாமை போராட்டம்போல் நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தை பூட்டி வைத்துக்கொள்வது, அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருப்பது, வேண்டா வெறுப்பாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தள்ளாட்டம் கண்டு வரும் கடலுார் அலுவலகத்திற்கு விரைவில் வட்டார போக்குவரத்து அதிகாரியை நியமித்து வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.