/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மே 22, 2024 12:51 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் தரைக்கடைகளை அகற்றும் பணி நடந்தது.
விருத்தாசலம், காட்டுக்கூடலுார் சாலையில், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட் இயங்கி வருகிறது.
இங்கு வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி 5.41 கோடி ரூபாயில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, பழைய இடத்தில் இயங்கி வரும் கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், புதிய கட்டடத்தில் கடைகள் பெறுவது மற்றும் தற்காலிக இடம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் அதிருப்தி நிலவியது. இது தொடர்பாக கலெக்டர் அருண் தம்புராஜிடம் முறையிட்டதன் பேரில், நாளை (23ம் தேதி) கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்வது என, வியாபாரிகள் தரப்பில் உறுதியளித்தனர்.
இந்நிலையில், காய்கறி மார்க்கெட்டில் உள்ள 13 தரைக்கடைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) ப்ரீத்தி உத்தரவின்பேரில், நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அகற்றினர். அப்போது, ஒரு சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.
அப்போது, நிரந்தர கடைகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், நாளை பாரபட்சமின்றி காலி செய்யப்படுவார்கள் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஐயனார், ரவிக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

