/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் கும்பாபிஷேக தடை நீக்கம் நெல்லிக்குப்பத்தில் இழுபறிக்கு தீர்வு
/
கோவில் கும்பாபிஷேக தடை நீக்கம் நெல்லிக்குப்பத்தில் இழுபறிக்கு தீர்வு
கோவில் கும்பாபிஷேக தடை நீக்கம் நெல்லிக்குப்பத்தில் இழுபறிக்கு தீர்வு
கோவில் கும்பாபிஷேக தடை நீக்கம் நெல்லிக்குப்பத்தில் இழுபறிக்கு தீர்வு
ADDED : ஏப் 21, 2024 05:56 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் நத்தம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிேஷக திருப்பணி செய்வதில், ஊராட்சித் தலைவர் நவீன்குமார் மற்றும் த.வா.க., நிர்வாகி ராஜி ஆகியோரிடையே பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரையும் 5 முறை அழைத்து, கடலுார் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில், கிராம மக்கள் இணைந்து கோவில் திருப்பணியை முடித்து நாளை (22ம் தேதி) கும்பாபிஷேகம் நடத்த இருந்தனர். இந்நிலையில், கடந்த 17 ம் தேதி, ஆர்.டி.ஓ.,அபிநயா முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. முடிவு ஏற்படாததால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்து அபிநயா உத்தரவிட்டார்.
இதை கண்டித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதனப்படுத்தினர். அதையடுத்து நேற்று முன்தினம் நடந்த தேர்தலை புறக்கணித்து ஒட்டுப்போட யாரும் செல்லவில்லை. டி.எஸ்.பி., பழனி பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் சமாதான கூட்டம் நடத்தி, நல்ல முடிவு எடுக்கலாம் என கூறியதால் கலைந்து சென்றனர். ஓட்டு போட்டனர்.
கும்பாபிேஷகத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் துவங்க வேண்டிய யாகசாலை பூஜைகள் துவங்காததால் பக்தர்கள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. அப்போது இரண்டு கோஷ்டியினரும் வாய்தகராறு செய்து தாக்கி கொண்டனர். இதனால், கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று மாலை, கடலுாரில் ஆர்.டி.ஓ., தலைமையில் கும்பாபிேஷகம் தொடர்பாக நவீன்குமார், ராஜி தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கும்பாபிேஷகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஆர்.டி.ஓ., நீக்கினார்.
இதனால், கிராம மக்கள், கும்பாபிேஷக ஏற்பாடுகளை துவக்கினர். இருந்தும் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

