UPDATED : அக் 12, 2026 08:20 PM
ADDED : அக் 12, 2026 08:18 PM
பரங்கிப்பேட்டை: மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டி, பரங்கிப்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் மஜீத்திடம், வி.சி.க., மாவட்ட செயலாளர் தமிழ்வளவன், தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்த, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 10 ஆண்டிற்கு முன் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதானதால், இடிக்கப்பட்டது. அதனால், பொதுமக்கள் கை பம்பு மூலம் குடிநீர் பிடித்து வந்தனர். தற்போது, நீர் மட்டம் குறைந்ததால் கை பம்பில், குடிநீர் வருவது குறைந்து வருகிறது.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு கொடுத்த போது, மாவட்ட துணை செயலாளர் எழில்வேந்தன், மாவட்ட நிர்வாகக்குழு பாலசந்திரன், சிவபாலசந்திரன், ஒன்றிய செயலாளர் தெய்வநாதன், மாவட்டபொறுப்பாளர் சின்னத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
