/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகரித்து வரும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
/
அதிகரித்து வரும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
அதிகரித்து வரும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
அதிகரித்து வரும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : ஆக 16, 2024 11:07 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அதிகரித்துள்ள பேனர் கலாசாரத்தை ஒழிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுதும் அரசியல் நிகழ்ச்சிகள், தனிப்பட்ட சுப நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது நினைவஞ்சலிக்கும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் விளம்பர பிரியர்கள் அதிகளவு பேனர்களை வைத்து ஒரு கலாசாரமாகவே மாற்றி விட்டனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேனர்கள் வைக்க கூடாது என தன் கட்சி தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார். அதையும் மீறி அவர்கள் பேனர்கள் வைப்பது தொடர்கிறது.
ஆளுங்கட்சியினர் வைப்பதை பார்த்து மற்றவர்களும் அதிகளவு பேனர் வைக்கின்றனர். இதனால் பல இடங்களில் காற்றில் சரிந்து விழுந்து உயிரிழப்புகளும் காயங்களும் அடைகின்றனர்.
நெல்லிக்குப்பத்தில் உள்ள முக்கிய சாலையில் கடைகளை மறைத்து நீண்ட தொலைவுக்கு பேனர்கள் தொடர்ந்தது. இதனால், வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேனர்கள் வைப்பது இல்லாமல் இருந்தது.
ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அரசியல் கட்சி பிரமுகர்களின் இல்ல திருமணத்துக்காக ஊரெங்கும் பேனர்கள் வைத்தனர். அதைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர்கள் வைப்பது அதிகரித்து வந்தது. அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பேனர் வைப்பது மறைந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகளவு பேனர் வைக்கப்படுகிறது.
பேனர்கள் வைக்க வேண்டுமானால் நகராட்சி மற்றும் போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை யாரும் பின்பற்றுவதில்லை.
கடைகளை மறைத்து பேனர்கள் வைப்பதால் வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் போலீசில் புகார் கூறினர். ஆனால் போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
எஸ்.பி., தலையிட்டு பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.