/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் அருகே சாலை மறியல்
/
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் அருகே சாலை மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் அருகே சாலை மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் அருகே சாலை மறியல்
ADDED : ஜூன் 13, 2024 12:30 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு சாலையின் இருபுறம் வடிகால் கட்டப்பட்டு ஏழு மாதங்களாகியும், இணைப்பு கொடுக்காமல் கழிவுநீர் வழிந்தோட வசதியில்லை.
இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக மாறியது. மாதக்கணக்கில் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள சாலை வழியாக வடிகால் பணி நடைபெற வேண்டும். இதனால் வடிகால் பணி முழுமை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலை 8:00 மணியளவில், விருத்தாசலம் - மங்கலம்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் ஊராட்சித் தலைவர் சவுமியா வீரமணி வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அவ்வழியே விருத்தாசலத்தில் உள்ள தனியார், அரசு பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வடிகாலை சீரமைக்கும் பணிகள் நடந்தது. இதனால் கிராம மக்கள், 9:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதித்தனர்.