/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 81.12 கோடியில் அருவாமூக்கு வெள்ளத் தடுப்பு திட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

ADDED : ஜூன் 25, 2024 07:13 AM

கடலுார் : கடலுார் அருகே ரூ. 81.12 கோடியில் அருவாமூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
கடலுார் மாவட்டத்திலுள்ள 58 கி.மீ. நீளமுள்ள பரவனாறு, விருத்தாசலம் அருகே சேமக்கோட்டையில் தொடங்கி கடலுார் பழைய துறைமுகம் அருகே கடலில் முடிகிறது. பரவனாற்றில் மழை காலங்களில் மழை நீருடன் சேர்த்து நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீரும் கலந்து வெளியேறுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பரவனாற்றையொட்டிய 24 கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, கடலுார் முதுநகர் அருகே அருவாமூக்கு வெள்ளத்தடுப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அப்பணிகள் துவக்க விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம் திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கீழ்பரவானற்றில், அருவாமூக்கு எனும் இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து ஒரு புதிய கால்வாய் வெட்டி 1.60 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் எளிதில் வெள்ள நீரை வடிய வைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணி நிறைவேற்றப்படும் பட்சத்தில் பரவனாற்றில் மழை காலங்களில் வெள்ளம் பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும் என, தெரிவித்தார்.
விழாவில் எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., க்கள் ராஜசேகரன், ருத்ரைய்யா, ஆர்.டி.ஓ., அபிநயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.