கட்சித்தலைமை நடவடிக்கைக்கு முன் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை!
கட்சித்தலைமை நடவடிக்கைக்கு முன் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை!
UPDATED : செப் 06, 2025 12:26 PM
ADDED : செப் 06, 2025 11:10 AM

சென்னை: தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கழகம் ஒன்று பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த அறிக்கை வெளியான நிலையில், அவரது கட்சிப்பதவிகளை பறித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செங்கோட்டையன் நிருபர்கள் சந்திப்பில், ''அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்,” என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (செப் 06) செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆரால்
உருவாக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது. அதிமுக
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக
பணியாற்ற வேண்டும் என்ற வகையில் பெரும்பான்மையான தொண்டர்கள் மற்றும்
பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து
கழகம் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன்.
இந்த
செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிந்து பல்லாயிரக் கணக்கானோர் வருகை
தந்து, எனக்கு பெரும் வரவேற்பை அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி
நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி. இவ்வாறு செங்கோட்டையன் கூறியிருந்தார்.
செங்கோட்டையன் நீக்கம்
இந்நிலையில், கட்சியினருடன் ஆலோசனைக்கு பிறகு, அதிமுகவின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்
பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கம் செய்து
இபிஎஸ் உத்தரவிட்டார்.
ஆதரவாளர்கள் பதவியும் பறிப்பு
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகளை பறித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.