ADDED : ஆக 28, 2024 07:43 AM
விருத்தாசலம்,: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பின்னர் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வமணியைசந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், இலவச மனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற மனு கொடுத்தும் அதிகாரிகள் தள்ளுபடி செய்கின்றனர். 40 முதல் 60 சதவீதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும்.
நுாறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நீல வண்ண அட்டை மற்றும் முழு ஊதியம், தனி வேலை பதிவேடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பணித்தள பொறுப்பாளர் பதவி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட நேர்முக உதவியாளர், அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

