ADDED : ஏப் 11, 2024 04:25 AM

கடலுார்: தொழிலாளி இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
கடலுார் அடுத்த ஆணையம்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர், 44; தொழிலாளி. இவர், கடலுார்-சிதம்பரம் சாலை, கீழ்பூவாணிக்குப்பத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி, சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி இறந்தார்.
அவரது குடும்பத்தினர், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக் கோரி மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலமாக கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக 12 லட்சத்து 81ஆயிரத்து 376 ரூபாய் வழங்க கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இழப்பீடு போதுமானதாக இல்லாததால் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வட்டியுடன் சேர்த்து 30 லட்சத்து 93 ஆயிரத்து 826 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும் இழப்பீடு செலுத்தாததால் கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி பிரபாகரன், விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து, கோர்ட்டில் நிறுத்தினர்.

