/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கு தனி வார்டு
/
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கு தனி வார்டு
ADDED : மே 08, 2024 11:40 PM

கடலுார்: 'ஹீட் ஸ்ட்ரோக்' (வெப்ப அலை) பாதிப்பு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலை சுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பலரும் ஆளாகியுள்ளனர். வெயில் காரணமாக திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. காலையில் துவங்கும் புழுக்கம் இரவு வரை நீடிக்கிறது. அனல் காற்று வீசவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சாலைகளில் கானல் நீர் காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, முதியவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு சிகிச்சைக்காக அதிதீவிர சிகிச்சை பிரிவில் 2 படுக்கை வசதிகள், வெப்ப பாதிப்புகளுக்கான சிறப்பு வார்டில் 10 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இங்கு வரும் நோயாளிகளுக்கு உப்பு-சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்., குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.