UPDATED : ஆக 17, 2026 09:56 PM
ADDED : ஆக 17, 2026 09:33 PM
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் வி.சி.மாநாடு எதிரொலியாக போலீசார் அறிவுறுத்தலால் கடைகளை அடைத்தனர். உளுந்தூர்பேட்டையில் நேற்று வி.சி.,மாநாடு நடந்தது.இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியினர் காலையில் இருந்தே கார்,வேன்,பஸ் மூலமாக சென்றனர்.மாநாட்டில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் மாநாட்டை முடித்து கொண்டு இரவு தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்.
நெல்லிக்குப்பத்தில் அனைத்து கடைகளையும் மாலை மூட வேண்டுமென போலீசார் வாய்மொழியாக வர்த்தகர்களுக்கு உத்தரவிட்டனர்.இதனால் மாலை 5 மணிக்கே வர்த்தகர்கள் கடைகளை மூடினர்.பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே கடைகளை மூட சொன்னதால் வர்த்தகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் வழக்கம் போல் மாலை காய்கறி வாரச்சந்தை செயல்பட்டது.
மற்ற கடைகள் இல்லாததால் வாரச்சந்தையில் காய்கறி விற்பனை வழக்கத்தை விட அதிகளவு நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மற்ற கட்சிகளின் மாநாடு நடக்கும் போது கடைகளை போலீசார் மூட சொல்வதில்லை.எங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி தரவே வேண்டுமென்றே கடைகளை போலீசார் மூட சொல்வதாக வி.சி.,நிர்வாகிகள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
