ADDED : மே 20, 2024 05:27 AM
கடலுார் : தமிழகத்தில் இறால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் மீனவர்கள், இறால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய இறால்களை பண்ணைகளில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது கோடை காலமாக இருப்பதால் கடலில் விசைப்படகின் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பைபர் படகில் மட்டும் மீன் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதனால், மீன்கள் விலை மற்ற நாட்களை விட உயர்ந்துள்ளது. இந்த நாட்களில் வழக்கமாக இறால் விற்பனை அதிகளவில் இருப்பதால் விலை உயர்வாக இருக்கும். ஏற்றுமதி செய்யப்படும் இறால்களும் தற்போது குறைந்துள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தில் பிடிக்கப்படும் இறால்கள் அனைத்தும் உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இறால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதுவரை 10 கிராம் எடையுள்ள இறால் ஒரு கிலோ 250 வரை விற்பனையாகி வந்தது. தற்போது இந்த விலை குறைந்து 210 ரூபாயாக உள்ளது. இதனால், இறால் வளர்ப்பு விவசாயிகள் நஷ்டத்திற்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின் கட்டணம் போன்றவை உயர்வால் ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்யவே 210 ரூபாய் ஆகிறது. இதனால், இறால் வளர்க்கும் தொழிலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

