ADDED : மே 06, 2024 06:05 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு பணி நடந்தது.
விருத்தாசலம் தாலுகாவில் 2024 - 2025ம் ஆண்டு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 10 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் மண் மாதிரி சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, விருத்தாசலம் அடுத்த எருமனுார், சின்னவடவாடி கிராமங்களில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பிரேம்சாந்தி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மண்மாதிரி எடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
மேலும், குறுகிய கால பயிர்கள், ஓராண்டு கால பயிர்கள் மற்றும் பல்லாண்டு பயிர்களான பழ மர பயிர்களுக்கு மண் மாதிரி எடுக்கும் முறை, மண் மாதிரி ஆய்வின் முக்கியத்துவம்.
உழவன் செயலியில் விவசாயிகள் தங்களின் வயல்களில் மண் மாதிரி ஆய்வு அறிக்கையை தெரிந்து கொள்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஆய்வின் போது, வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி வேளாண் அலுவலர்கள் சித்தராங்கி, பிரகாஷ், ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதிவாணன் உடனிருந்தனர்.