/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பில் மஞ்சள் நிற நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
/
கரும்பில் மஞ்சள் நிற நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
கரும்பில் மஞ்சள் நிற நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
கரும்பில் மஞ்சள் நிற நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
ADDED : செப் 13, 2024 07:03 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதிகளில் பயிரிடப்பட்ட கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். அறுவடை செய்யும் கரும்புகளை பெண்ணாடம் அடுத்த இறையூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்று லாபம் ஈட்டி வந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறையூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை, தொழிலாளர்களின் சம்பள பாக்கி மற்றும் ஆலையின் நிர்வாக காரணங்களால் மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்தனர். இதன் காரணமாக விவசாயிகளும் கரும்பு சாகுபடி பரப்பளவை குறைத்துக்கொண்டு, நெல், பருத்தி, கேழ்வரகு மற்றும் சவுக்கு பயிர் செய்ய மாறினர்.
ஆனாலும், பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை பகுதி விவசாயிகள் குறைந்த பரப்பில் கரும்பு சாகுபடி செய்து, நெல்லிக்குப்பம், பெரம்பலுார், திருச்சி காட்டூர், சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அவ்வாறு, சாகுபடி செய்யப்பட்ட கரும்பில் கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் நிற நோய் தாக்கி, மகசூல் முற்றிலும் குறைந்து, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வந்தன. இதனை கட்டுப்படுத்த விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளும் அவ்வப்போது பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். ஆனால் மஞ்சள் நோய் தாக்குதல் தொடர்ந்து ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்ணாடம் வேளாண் விரிவாக்க மைய, துணை வேளாண் அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:
'கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக காணப்படுவது அதிக வெப்பத்தின் காரணமாகவும் இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்துக்களின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. நோயினை கட்டுப்படுத்த பெரசல்பேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் 250 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். இதே போன்று ஜிங் சல்பேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் வீதம், 250 லிட்டரில் கலந்து 15 இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
பெரசல்பேட், ஜிங் சல்பேட் ஆகிய நுண்ணுாட்டச் சத்துக்களை ஒரே சமயத்தில், ஒன்றாகவும் கலந்து தெளிக்கக்கூடாது. தனித்ததனியாக தெளிக்க வேண்டும். மேலும், இந்த மஞ்சள் நோய் தாக்குதலை தாங்கக்கூடிய வீரிய ரக கரும்பை பயிரிட வேண்டும். மஞ்சள் நிற நோயை கட்டுப்படுத்த அதிக பாதிப்பு உள்ள கரும்பில் மறுதாம்பு விடுவதை தவிர்ப்பது. நோய் தாக்குதல் இல்லாத கரும்புகளில் இருந்து விதை கரணைகள் தேர்வு செய்ய வேண்டும்' என்றார்.