ADDED : ஆக 02, 2024 01:40 AM

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் இறந்தார். இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்தனர்.
சேத்தியாத்தோப்பு, குறுக்கு ரோட்டைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி சரண்யா, 33. இவர், தனது 6 வயது மற்றும் 8 வயது மகன்களுடன் உறவினர் பாஸ்கர் என்பவருடன் பைக்கில் சேத்தியாத்தோப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலை அருகே சென்றபோது மழை பெய்ததால் ஒதுங்கி நின்றனர்.
அப்போது அவ்வழியாக பருத்தி ஏற்றி வந்த மினி சரக்கு வேன் பைக் பின்னால் மோதி, இழுத்துச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த சரண்யா, அவரது மகன்கள் மற்றும் பாஸ்கர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சரண்யா மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார்வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.