/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேட்பாளரும் வரல; அமைச்சரும் வரல... பிரசார கூட்டத்தை முடித்த நிர்வாகிகள்
/
வேட்பாளரும் வரல; அமைச்சரும் வரல... பிரசார கூட்டத்தை முடித்த நிர்வாகிகள்
வேட்பாளரும் வரல; அமைச்சரும் வரல... பிரசார கூட்டத்தை முடித்த நிர்வாகிகள்
வேட்பாளரும் வரல; அமைச்சரும் வரல... பிரசார கூட்டத்தை முடித்த நிர்வாகிகள்
ADDED : ஏப் 13, 2024 05:09 AM
குள்ளஞ்சாவடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்., வேட்பாளரும், அமைச்சரும் வராததால் நிர்வாகிகள் கூட்டத்தை முடித்தனர்.
குள்ளஞ்சாவடி, அண்ணா பாலம் பகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான காங்., கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளருக்கு ஓட்டு கேட்கும் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரிப்பார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வேட்பாளருக்கு ஆதரவாக பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாலை, 6:30 மணி முதல் கலை நிகழ்ச்சி துவங்கி நடந்தது.
ஆனால், பொதுமக்கள் கூட்டம் பெருமளவில் இல்லை. இரவு 8:00 மணி வரை நடந்த நிகழ்ச்சி முடிந்ததும், ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தவர்களும் கலையத் துவங்கினர்.
இதையடுத்து உள்ளூர் நிர்வாகி ஒருவர், தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும், ஆளும் மத்திய அரசை விமர்சித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, வேட்பாளர் மற்றும், அமைச்சர் வராமல் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு மேடை காலியானது.
இதுகுறித்து கேட்டபோது, வேட்பாளர் சுற்றுப்பகுதி கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக இருந்ததால் கூட்டத்திற்கு வர இயலவில்லை என காங்., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் பெரிய அளவில் ஆதரவு இல்லாததால் கூட்டம் சேராது. அதனால், பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் வரவில்லை என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்-நமது நிருபர்-.

