/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை தலைமை ஆசிரியர் சி.இ.ஓ.,வுக்கு தலைவலி
/
போதை தலைமை ஆசிரியர் சி.இ.ஓ.,வுக்கு தலைவலி
ADDED : ஆக 28, 2024 04:59 AM
மாவட்டத்தில், உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் போதையில் பணிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர் பலர் முறையிட்டும், கல்வித்துறை அதிகாரிகளை சரிகட்டி, அவர் பணியில் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில், வடலுாரில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், சி.இ.ஓ., எல்லப்பன் பங்கேற்றார். அதில், தலைமை ஆசிரியர்களிடம் சில விபரங்களை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கென குறிப்பிட்ட தலைமை ஆசிரியர்களின பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
உஷாரான சி.இ.ஓ., பெயர் பட்டியலை தவிர்த்து, அதற்கு மாறாக சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்தார். அப்போது, போதை தலைமை ஆசிரியரின் பெயரும் வரவே, அவரும் சி.இ.ஓ., அருகே சென்றுள்ளார். அப்போது அவர் மீது வீசிய மது வாசம் சி.இ.ஓ., விற்கு தலைசுற்றலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடுப்பான சி.இ.ஓ., அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், அவர்களுக்கு உரிய சங்கத்தினர் சிலர் சென்று, தலைமை ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இனிமேல் இதுபோல நடக்காது என அவர்கள் இணைந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தனர். இதனால் அதிருப்தியடைந்த சி.இ.ஓ., என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.
பலமுறை பள்ளிக்கு மதுபோதையில் வந்து கல்வித்துறை அதிகாரிகளால் கடும் கோபத்திற்கு ஆளான தலைமை ஆசிரியர் மீது சி.இ.ஓ., கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.