/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிரந்தர அதிகாரிகள் இல்லை விருதையின் நிலை பரிதாபம்
/
நிரந்தர அதிகாரிகள் இல்லை விருதையின் நிலை பரிதாபம்
ADDED : மே 15, 2024 01:12 AM
விருத்தாசலம் நகராட்சியில் கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில் பொறுப்பு அதிகாரிகளே இருப்பதால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் நகராட்சி கமிஷனராக இருந்த பானுமதி, பல்லடம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அதை தொடர்ந்து, பண்ருட்டி நகராட்சி கமிஷனர் ப்ரீத்தி கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அவர், விருத்தாசலம் நகராட்சிக்கு வந்து செல்ல முடிகிறது. மற்ற நாட்களில் முக்கியமான கோப்புகளை, இங்கிருந்து பண்ருட்டிக்கு எடுத்துச் சென்று கையெழுத்து பெறும் நிலை உள்ளது.
அதுபோல், நகராட்சிப் பொறியாளர், மேலாளர், துப்புரவு அலுவலர் ஆகிய பணியிடங்களிலும் நேரடி அதிகாரிகள் இல்லாமல், பொறுப்பு அதிகாரிகளே கவனித்து வருகின்றனர். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகத்திற்கு பொறுப்பு அதிகாரிகளே பணியில் இருப்பதால் நிர்வாகப் பணிகள் தொய்வடைந்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்தால் மட்டுமே புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்பதால், தேர்தல் முடிவை எதிர்நோக்கி பணியாளர்களும், பொதுமக்களும் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

