/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து இரு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
/
ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து இரு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து இரு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து இரு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : ஏப் 20, 2024 05:27 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே தனி ஊராட்சியாக மாற்றக் கோரி இரு கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக் கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட விருத்தாசலம் ஒன்றியம், பரவளூர் ஊராட்சியின் துணை கிராமம் கச்சிபெருமாநத்தத்தில் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோன்று கம்மாபுரம் ஒன்றியம் முதனை ஊராட்சியின் துணை கிராமமான விருத்தகிரிகுப்பத்தில் 1,500 வாக்காளர்கள் உள்ளனர்.
அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்காததால், தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டி இரு கிராம மக்களும் அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனையொட்டி இரு கிராம மக்கள், தங்கள் கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப்போவதாக இரு வாரங்களுக்கு முன் அறிவித்தனர். மேலும், கச்சிபெருமாநத்தம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.
கிராம மக்களின் அறிவிப்பை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தினர். கச்சிபெருமாநத்தம் கிராமத்தில் உள்ள 921 வாக்காளர்களுக்காக ஒரு ஓட்டுச்சாவடியும், விருத்தகிரிகுப்பத்தில் உள்ள 1,235 வாக்காளர்களுக்காக 2 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டது.
நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியபோதிலும், கச்சிபெருமாநத்தம் மற்றும் விருத்தகிரிகுப்பம் கிராம ஓட்டுச் சாவடிகளுக்கு ஓட்டு போட வாக்காளர்கள் எவரும் வரவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் விருத்தகிரிகுப்பம் கிராம மக்களிடமும், தாசில்தார் உதயகுமார், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் ஆகியோர் கச்சிபெருமாநத்தம் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு இரு கிராம மக்கள், தங்கள் கிராமங்களை தனி ஊராட்சி அறிவிக்காவிட்டால், ஓட்டுபோட வர மாட்டோம் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தகவலறிந்த எஸ்.பி., ராஜாராம், மேற்கண்ட மூன்று ஓட்டுச் சாவடிகளையும் பார்வையிட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் போலீசாரை நியமித்தார்.
இரு கிராமங்களிலும் மாலை 5:00 மணிவரை ஒருவரும் ஓட்டுப்போட முன்வரவில்லை. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக கச்சிபெருமாநத்தம் ஓட்டுச்சாவடி எண் 84ல் 2 பேரும், விருத்தகிரிகுப்பம் ஓட்டுச்சாவடி என் 198ல் 58 பேரும்,. ஓட்டுச்சாவடி எண் 200ல் 7 பேர் மட்டும் ஓட்டு போட வைத்து, கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை அதிகாரிகள் முறியடித்தனர்.
அன்றே சொன்னது'தினமலர்'
கடந்த 13ம் தேதியன்று, 'கிராமங்கள் தோறும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், 100 சதவீத ஓட்டுப்பதிவு சாத்தியமா' என்ற தலைப்பில் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அப்போதே அதிகாரிகள், கிராம மக்களை அழைத்து பேசியிருந்தால், நேற்று ஓட்டுப்பதிவு நடந்திருக்கும்.
ஊராட்சியாக பிரிப்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது, இரு கிராம மக்கள் ஓட்டுபோடாமல் தவிர்க்க காரணமாகி விட்டது.

