/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்கறி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
/
காய்கறி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
ADDED : ஏப் 30, 2024 06:05 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியை கண்டித்து, காய்கறி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையில் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. தற்போதுள்ள பழைய காய்கறி மார்க்கெட்டை இடித்துவிட்டு, நகராட்சி சார்பில் 5 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக நவீன காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஒரு பகுதியில் இருந்த பழைய கடைகளை அகற்றி விட்டு, புதிதாக கட்டடங்கள் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், மற்றொரு பகுதி கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தது.
அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் வளாகத்தில், தற்போது வியாபாரம் செய்யும் 103 காய்கறி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
காய்கறிகள் வீணாகாமல் இருக்க, காற்றோட்டமான வசதியுடன் தரமான கட்டடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கடைகளை அகற்ற, நகராட்சி சார்பில் வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், நேற்று 28ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும். தவறினால் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதில், அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து, குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் திடீர் போராட்டத்தால், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

