/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலைகளை விரிவுபடுத்தியும் போக்குவரத்து பாதிப்பு: விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
/
சாலைகளை விரிவுபடுத்தியும் போக்குவரத்து பாதிப்பு: விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
சாலைகளை விரிவுபடுத்தியும் போக்குவரத்து பாதிப்பு: விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
சாலைகளை விரிவுபடுத்தியும் போக்குவரத்து பாதிப்பு: விருத்தாசலம் நகரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ADDED : ஜூன் 06, 2024 02:46 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் சாலைகளை விரிவுபடுத்தியும், ஆக்கிரமிப்பு காரணமாக தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர்.
கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் நகரம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார், வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் விருத்தாசலம் வழியாக சென்று வருகின்றன.
மேலும் கடலுார் துறைமுகம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், பெண்ணாடத்தில் உள்ள தனியார் சிமென்ட், சர்க்கரை ஆலைகள், சேலம் இரும்பு உருக்கு ஆலை போன்ற நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் இதன் வழியாக அதிக அளவில் செல்கின்றன.
அதிக வாகன போக்குவரத்து காரணமாக நகரில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன. இதை தவிர்க்க, கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, 300 கோடி ரூபாயில் சாலையை விரிவாக்கம் செய்து, பொன்னாலகரம் கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. அதுபோல், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 22 கி.மீ., தொலைவிற்கு, 136 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும், நகரில் பிரதான ஜங்ஷன் சாலை, பெண்ணாடம் ரோடு (கடைவீதி), தென்கோட்டை வீதி (வேப்பூர் சாலை) உள்ளிட்ட சாலைகளும், வாகன நிறுத்த வசதியுடன் அகலப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வர முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. 100 முதல் 200 மீட்டர் சாலையை கடந்து செல்ல 15 முதல் 20 நிமிடங்கள் வரை செலவாகிறது.
மேலும், பெருவணிக நிறுவனங்கள், வங்கிகளுக்கு முன்பு நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம், கடைவீதி நான்கு முனை சந்திப்பு, தெற்கு தெரு, தென்கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அவ்வழியே அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகும்போது நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் இணைந்து, கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவர். ஆனால், ஓரிரு நாட்களில் மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பது தொடரும். இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகள், விளம்பர பதாகைகள், போர்டுகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றிட அதிகாரிகள் இணைந்து தீர்வு காண வேண்டும்.
மேலும், பார்க்கிங் இல்லாமல் இயங்கும் வணிக நிறுவனங்கள் மீது நகராட்சி நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.