ADDED : ஜூலை 17, 2026 07:51 PM
வடலுார்: வடலுார் பை-பாஸ் சாலை பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
சென்னையில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, வடலுார், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் செல்லும் வி.கே.டி சாலை எனும், விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
கொரோனா தாக்கம், ஒப்பந்ததாரர் பணி குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த, 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதில் வடலுார் பை-பாஸ் அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நடந்து, பின்னர் கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் முடங்கின. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில், மீண்டும் பணிகள் சுணக்கம் அடைந்தன.
இந்த நிலையில் தற்போது ஆண்டிக்குப்பம் பகுதியில் மீண்டும் வடலுார் பைபாஸ் ரயில்வே மற்றும், நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது கடலுார்–சேலம் நெடுஞ்சாலையில், ராட்சத கிரேன் மூலம் மேம்பால பணிகள் வேகமெடுத்து நடந்து வருகின்றன.
வடலுார் பை-பாஸ் பணிகள் முடிந்து விக்கிரவாண்டி வரையிலான எஞ்சியுள்ள பணிகள் முழுவதுமாக முடிந்தால், வி.கே.டி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் முற்றிலுமாக முடிவடையும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
