/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் அறிவித்த வீராணம் மேம்பாட்டு திட்ட பணிகள் ... துவங்கியது
/
முதல்வர் அறிவித்த வீராணம் மேம்பாட்டு திட்ட பணிகள் ... துவங்கியது
முதல்வர் அறிவித்த வீராணம் மேம்பாட்டு திட்ட பணிகள் ... துவங்கியது
முதல்வர் அறிவித்த வீராணம் மேம்பாட்டு திட்ட பணிகள் ... துவங்கியது
UPDATED : அக் 24, 2025 04:26 AM
ADDED : அக் 24, 2025 03:19 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரியில், 63.5 கோடியில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, வெள்ள தடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக வெள்ளியங்கால் ஓடையில், தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ளது வீராணம் ஏரி. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கல்லணை வழியாக கிழணையில் தேக்கப்பட்டு, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி தேக்கப்படுகிறது. இதன் மூலம் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. அத்துடன், ஏரியில் தண்ணீர் தேக்கி, சென்னை மக்களின் தாகம் தீர்க்க இங்கிருந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒவ்வொறு ஆண்டும் பருவ மழை காலங்களில் வீராணம் ஏரிக்கு வரும் அதிக அளவு தண்ணீர், வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றும் போது சுமார 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும். இதற்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தும் வகையில், வீராணம் வெள்ள தடுப்பு மேம்படுத்தும் பணிகளுக்கான 63.50 கோடி நிதியில் திட்டம் தீட்டப்பட்டு, கடந்த ஜூலை மாதம் சிதம்பரம் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தில், வெள்ள காலங்களில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வெள்ளியங்கால் ஓடை துார் வாரி, லால்பேட்டை மற்றும் திருநாரையூர் கிராமத்தில், இரு இடங்களில், வெள்ள தடுப்பு சுவர் அமைப்பது, வீராணம் ஏரியில் லால்பேட்டை அருகே 6 ஷட்டருடன் கூடிய புதிய மதகு அமைப்பது, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாழ்வாய்க்கால், துார் வாருவது, ஏரியில் உள்ள 28 ஷட்டர்கள் பழுது பார்ப்பது, வடவற்றில் 4 இடங்களில் புதிய ஷட்டர்கள் அமைப்பது ஆகிய பணிகள் செய்ய முடிவு செய்யபப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது முதல் கட்ட பணியாக, வீராணம் ஏரியில் இருந்து வெள்ள காலங்களில் தண்ணீர் வெளியேற்றப்படும் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
லால்பேட்டை அருகே 200 மீட்டர் நடைபெறும் இப்பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து மனவாய்க்காலில் 130 மீட்டர் துாரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
மழைக்கு பின்பு துார் வாரும் பணிகள் மற்றும் புதிய ஷட்டர் மற்றும் பழுதடைந்த ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெறும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

