ADDED : ஆக 16, 2024 06:14 AM
வேப்பூர்: வேப்பூர் அருகே கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம் நிறைவேற்றாததால், கருப்புக்கொடி ஏந்தி ஒரு பிரிவினர் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் காசி முனியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஒரு பிரிவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனை அகற்றக் கோரி, மற்றொரு பிரிவினர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
நேற்று நடந்த சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் மண்ணாங்கட்டியிடம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி ஒரு பிரிவினர் முறையிட்டனர்.
அப்போது, ஊராட்சித் தலைவரின் விளக்கத்தை ஏற்க மறுத்து, கருப்புக்கொடி ஏந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
துணை பி.டி.ஓ., சங்கர் மற்றும் வேப்பூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பகல் 12:30 மணியளவில், கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி ஒரு பிரிவினர் வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

