/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி 2ம் முறையாக நிரம்பியது; இரு கிராமங்களில் நெற்பயிர்கள் சேதம்
/
வீராணம் ஏரி 2ம் முறையாக நிரம்பியது; இரு கிராமங்களில் நெற்பயிர்கள் சேதம்
வீராணம் ஏரி 2ம் முறையாக நிரம்பியது; இரு கிராமங்களில் நெற்பயிர்கள் சேதம்
வீராணம் ஏரி 2ம் முறையாக நிரம்பியது; இரு கிராமங்களில் நெற்பயிர்கள் சேதம்
ADDED : ஆக 11, 2024 06:57 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டில் இரண்டாம் முறையாக முழு கொள்ளவு நிரம்பியுள்ளது, ஏரியையொட்டிய இரு கிராமங்களில் விவசாய பயிர்கள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கீழணையில் சேமித்து, அங்கிருந்து, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இந்த ஏரி மூலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும், சென்னை மக்களின் தாகம் தீர்க்க இங்கிருந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, மார்ச் மாதம் ஏரியில் தண்ணீர் வறண்டதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, மே மாதம் இறுதியில், மேட்டூரில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு, ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல துவங்கினர். படிப்படியாக தண்ணீர் இருப்பு அதிகரித்து வந்த நிலையில், ஏரியின் முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பியதால் நீர் மட்டம் குறைந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், வீராணம் ஏரிக்கு கடந்த வாரம் மீண்டும் தண்ணீர் வரத் துவங்கி, நேற்று இந்த ஆண்டில் இரண்டாம் முறையாக முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடி நிரம்பியது.
நேற்றைய நிலவரப்படி, வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 1,886 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னைக்கு 73 கன அடியும், பாசனத்திற்கு 113 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் மூழ்கின
வீராணம் முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியின் மேல்கரை கிராமமான பா.புத்துார், மணவெளி ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் வயல்களில் தண்ணீர் தேங்கியதால், பயிர்கள் மூழ்கி சாய்ந்ததால், விவசாயிகள் செய்வதறியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அதையறிந்த பொதுப்பணித்துறையினர், ஏரியின் மேல்கரையில் மூழ்கிய பயிர்களை மீட்க, சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்., மதகு வழியாக 1,200 கன அடி தண்ணீர் வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.