/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் வீணாகிறது: குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு
/
ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் வீணாகிறது: குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு
ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் வீணாகிறது: குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு
ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் வீணாகிறது: குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 16, 2024 11:25 PM

விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில், பெரும்பாலான ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் பராமரிப்பின்றி வீணாகியுள்ளதுடன், குப்பைகள் குவிந்து கிடப்பதால் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ரசாயண உரங்களின் பயன்பாட்டை தவிர்த்து, இயற்கை விவசாயம் பெருகும் வகையில், ஊராட்சிகள் தோறும் மண்புழு உரம் தயாரிப்பு கூடம் கட்ட அனுமதி தரப்பட்டது. அந்தந்த ஊராட்சி நிர்வாக நிதியில், 1 லட்சம் ரூபாயில் மேற்கூரையுடன் மண்புழு தயாரிப்பு கூடம் கட்டப்பட்டது. 2 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட அளவில் சிமென்ட் தொட்டிகளும், அடித்தளம் சாய்வான வடிவில் தண்ணீரை வடிகட்டும் வகையில் கட்டப்பட்டன.
திடக்கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாய கழிவுகளான மாட்டு சாணம், இலை தழைகள், கிராமங்களில் துாய்மைப் பணியாளர்கள் மூலம் வீதிகளில் சேகரிக்கும் மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுகின்றன.
இதன் மூலம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய சத்துக்கள் அனைத்தும் இயற்கையான முறையில் 45 முதல் 60 நாட்களில் உரம் உற்பத்தியாகி விடும்.
இந்த உரம் மூலம் மண் வளம் அதிகரித்து, பயிர்கள் நன்கு விளைவதுடன் அதில் விளையும் பொருட்களும் கூடுதல் சத்துக்கள் கொண்டிருக்கும். ஆனால், பல்வேறு ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்புக் கூடம் கட்டிய நாளில் இருந்தே பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளன. மேலும் கொட்டகைகள் பெயர்ந்து, சிமென்ட் தொட்டிகள் மழை வெயிலில் வெடித்து, விரிசல் விட்ட நிலையில் வீணாகின்றன.
இதனால் மண்புழு உரம் உற்பத்தி பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், கிராமங்கள் தோறும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இவற்றில் நாய், பன்றிகள் உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் ஊராட்சிகள் தோறும் ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட மக்கள் வரிப்பணமும் பாழாகிறது.
எனவே, மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் பாழாகி வரும் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்களை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

