தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணாடம் புறவழிச்சாலை திட்ட பணிகள் துவங்குவது...எப்போது?: 4 ஆண்டுகளாக 'தொடரும்'அதிகாரிகள் ஆய்வு

பெண்ணாடம் புறவழிச்சாலை திட்ட பணிகள் துவங்குவது...எப்போது?: 4 ஆண்டுகளாக 'தொடரும்'அதிகாரிகள் ஆய்வு

பெண்ணாடம் புறவழிச்சாலை திட்ட பணிகள் துவங்குவது...எப்போது?: 4 ஆண்டுகளாக 'தொடரும்'அதிகாரிகள் ஆய்வு


UPDATED : ஜூலை 15, 2026 03:39 AM

ADDED : ஜூலை 14, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 03:39 AM ADDED : ஜூலை 14, 2026 10:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்:நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டப்பணிகளை, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்வது மட்டும் தொடர்வதால், நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) நெடுஞ்சாலையில், பெண்ணாடம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக பஸ், லாரி, சிமென்ட் லோடு லாரிகள் உட்பட, ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இங்கு, அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை, சிமென்ட் ஆலைகள் உள்ளன.

இதன் காரணமாக பெண்ணாடம் பழைய பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும்.

கிராமங்களில் இருந்து பெண்ணாடம் வருவோர், பழைய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரையிலான சாலையில் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்திச் செல்கின்றனர். தள்ளுவண்டி கடைகளையும் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.

எனவே, நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, பெண்ணாடத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதையடுத்து, பெண்ணாடத்தில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2022ல் அப்போதைய தி.மு.க., அரசு முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளையும் துவக்கியது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், 2022ல் மே மாதம் கொசப்பள்ளம், அரியராவி, திருமலை அகரம், கொத்தட்டை, பெ.கொல்லத்தங்குறிச்சி ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைய உள்ள பகுதிகளில் அளவீடு செய்யும் பணியும், தொடர்ந்து, 'டிரோன்' மூலம் எல்லைகள் மற்றும் துாரம் அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

கடந்த, 2023 டிசம்பர் மாதம் 31ம் தேதி நிலம் அளவீடு செய்த பகுதிகளில் கல் நடும் பணி நடந்தது. விளை நிலங்களில் கல் நடுவதற்கு, சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்தனர். ஆனாலும் அளவீடு பணி தொடர்ந்து நடந்தது. அதையடுத்து, 2024ல் கொத்தட்டை அருகே ரயில்பாதையொட்டி, புறவழிச்சாலைக்கு மேம்பாலம் அமைக்க போர்வெல் மூலம் மண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பெண்ணாடம், அரியராவி பகுதிகளில் புறவழிச்சாலை அமைய உள்ள இடங்களில் ஆய்வு செய்து, தனியார் நிலங்கள் எவ்வளவு ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளன. அரசு நிலங்கள் எவ்வளவு உள்ளன என திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அதற்கான அறிக்கையை விரைந்து அனுப்புமாறு அறிவுறுத்திச் சென்றனர்.

இதனால் அதிகாரிகள் ஆய்வு மட்டுமே தொடர்கிறது எனவும், புறவழிச்சாலை பணிகள் எப்போது துவங்கும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us