கடலுார் சாவடியில் இயங்கி வந்த நீரேற்று நிலையம்...செயல்படுத்தப்படுமா?: மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
கடலுார் சாவடியில் இயங்கி வந்த நீரேற்று நிலையம்...செயல்படுத்தப்படுமா?: மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 25, 2026 05:35 AM
ADDED : ஜூலை 24, 2026 07:52 PM

கடலுார்: கடலுார் மாநகராட்சி அருகே உள்ள பெண்ணை நதியில் அமைக்கப்பட்டுள்ள, 'செக்டேமில்' ஆண்டு முழுவதும் கிடைக்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய கடலுார் மாநகரம் 1866 ம் ஆண்டில் நகராட்சியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, 2008 ம் ஆண்டு, சிறப்பு நிலை சிறப்பு நகராட்சியாகவும், பின்னர் கடலுார் சிறப்பு நிலை நகராட்சி, கடந்த, 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகரில், 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு ஒருவருக்கு, 40 லி., தண்ணீர் வழங்கப்பட வேண்டும். வழக்கமாக கேப்பர் மலையில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து ராட்சத தொட்டிகளில் வடிகட்டி துாய்மைபடுத்திய பின்னர் மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு வினியோகிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த, 2005ம் ஆண்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாக கொண்டு, கடலுார் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு முக்கிய குடிநீர் திட்டமாகும். இத்திட்டத்தை, 255.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கீழணையில் இருந்து கசிந்து வரும் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில், எய்யலுாரில் கிணறு தோண்டி குழாய் இணைப்புகள் அமைத்து தண்ணீர் எடுத்து மாவட்ட கடற்கரையோர கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடலுார் மாநகராட்சிக்கு 6 எம்.எல்.டி.,க்கும் அதிகமாக, நீர் வழங்கப்பட வேண்டும். இந்த குடிநீர் கொண்டுவர பல இடங்களில் மின்சார மோட்டார் வைத்து பம்பிங் செய்து கொண்டு வந்து மேல்நிலை நீர் தொட்டிக்கு ஏற்றப்படுகிறது.இதில் குடிநீர் கொண்டு வர அதிகளவு செலவாகிறது. இருப்பினும் கொள்ளிடம் நீருடன், கேப்பர்மலை நீரும், கலந்து வினியோகிக்கப்படுகிறது.
இவ்வளவு செலவு செய்து கொண்டு வரும் குடிநீர் இருந்தாலும், ஏற்கனவே கடலுார் நகராட்சியாக இருந்தபோது, தென்பெண்ணையாற்றில் கிடைக்கும் நீரை பில்டர் பைப் லைன் அமைத்து சாவடியில் தலைமை தண்ணீர் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது அதை விட வசதியாக புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின்பேரில் 'செக்டேம்' அமைத்து தண்ணீர் ஆண்டு முழுவதும் அமோகமாக தேக்கி வைக்கப்படுகிறது.
இந்த நீரில், சிறு துளி கூட பயன்படுத்துவது இல்லை. மற்ற ஊராட்சிகளில் பயன்படுத்தாமல் போனாலும் கடலுார் மாநகராட்சியில் பல்வேறு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து மக்களுக்கு வினியோகிக்கப்பதை விட பெண்ணை ஆற்றுத்தண்ணீரை ஏன் பயன்பத்துவதில்லை என்கிற கேள்வி எழுகிறது.எனவே கேப்பர் மலையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் செம்மண் கலர் தண்ணீரை துாய்மைப்படுத்தி வினியோகிப்பதற்கு பதிலாக பெண்ணையாற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கு வினியோகிக்கலாம்.
ஏற்கனவே இயங்கி வந்த தண்ணீர் நிலையம் சீரமைக்காமல் விட்டது ஏன் எனதெரியவில்லை. புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி கமிஷ்னர் இதை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் கடலுார் மக்களுக்கு இனிப்பான குடிநீர் கிடைக்கும்.
