/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழைநீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்படுமா?
/
மழைநீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்படுமா?
ADDED : மே 15, 2024 12:57 AM
மாவட்டத்தில் கடும் கோடை வெயில் காரணமாக கிணறு, ஏரிகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், மீண்டும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக கடும் கோடை வெயில் காரணமாக பொது மக்களின் தண்ணீர் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகள் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியது.
அப்போது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. காலநிலை மாற்றத்தால் பருவ மழை குறிப்பிட்ட இடங்களில் அதிகமாகவும், பல பகுதிகளில் குறைவாகவும் பெய்தது. பூமிக்குள் போதிய அளவு மழைநீர் இறங்காததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.
மழைநீர் பூமிக்குள் செல்லும் வகையிலான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. தற்போது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
எனவே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

