/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு
/
வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு
வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு
வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு
ADDED : செப் 18, 2024 06:28 AM

திட்டக்குடி : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதுகுடியில் இருந்து, திருமாந்துறை டோல்பிளாசா வரையிலான பகுதியில் அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் நடக்கிறது.
குறிப்பாக, வேப்பூர் பஸ் நிலையம் எதிரே, மாதத்திற்கு சராசரியாக 20 விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் 'தினமலர்' நாளிதழில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 'நகாய்' சார்பில் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) சார்பில், வேப்பூர் பஸ் நிலையம் எதிரே மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.8.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, 2019ல், மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. 15 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என 'நகாய்' அதிகாரிகள் கூறினர்.
கட்டுமானப் பணிகளை பெங்களூருவை சேர்ந்த ஏ.இ.சி., புரோமேக் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டது.
மேலும், மேம்பால கட்டுமான பணிக்காக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், வேப்பூர் சர்வீஸ் சாலையில் செல்லும்விதமாக போக்குவரத்து மாற்றப்பட்டது.
மேம்பால பக்கவாட்டு சுவர் அமைத்த பின், கொரோனா தொற்று பரவல், மணல் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இரண்டு ஆண்டுகள் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடக்காத நிலையில், கடந்த 2021ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி மண்டல திட்ட இயக்குனர் நரசிங்கம், ஒப்பந்ததாரர்களுடன் பேசி விரைவில் பணிகள் துவக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, மேம்பாலம் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கியது.
இந்நிலையில், பாலத்தின் உயரம் 4 மீட்டர் என்ற அளவில் அமைக்கப்பட்டது. இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் கதிர்வேல் கோரிக்கை மனு அனுப்பினார்.
மனுவில், '1.25 கி.மீ., துாரத்தில் வேப்பூர் கூட்ரோடு மேம்பாலம், சிறுநெசலுார் மேம்பாலம் அமைந்துள்ளது. இதற்கிடையே, வேப்பூர் பஸ் நிலையம் எதிரேயுள்ள மேம்பாலம் உயரம் குறைவாக கட்டப்பட்டால் விபத்துகள் ஏற்படும். வாகனங்கள் பஸ் நிலையம் செல்ல முடியாது. எனவே, 5 மீட்டர் உயரம் மேம்பாலம் அமைக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கு, சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்த பின், மேம்பாலம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும், மேம்பால கட்டுமான பணிகள் தொடர்ந்ததால், சமூக ஆர்வலர் கதிர்வேல், கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வேப்பூர் கூட்டு ரோடு பாலம், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரிலுள்ள பாலம் இரண்டையும் இணைத்து சமதளமாக அமையும் வகையில் பாலம் அமைக்கப்படும் எனக் கூறிய அதிகாரிகள், அதுபோல அமைக்காமல் பஸ் நிலையம் எதிரே தனியாக ஒரு பாலம் அமைப்பதால் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு, 'நகாய்' தரப்பில், போக்குவரத்து துறை, ஆர்.டி.ஓ., மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்து, அவ்ரகளது அறிக்கையை பெற்று பாலம் பணிகள் நடக்கிறது என தெரிவித்தனர். இதையேற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2024 மே மாதம் நின்று போன கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் துவங்கி நடக்கிறது.
இருந்தபோதும், மணல் தட்டுப்பாடு காரணமாக, மேம்பால பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் அதிக விபத்துகள் நடப்பதை கருத்தில் கொண்டு, பணிகளை விரைவுபடுத்தி மேம்பாலத்தை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் கதிர்வேல் கூறுகையில், 'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கிராமத்திற்கு நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியாக வேப்பூர் உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல், நெடுஞ்சாலைக்கு அருகிலேயே பஸ் நிலையம் இருந்த நிலையில், பொதுமக்கள், பஸ்கள் செல்வதற்கு முறையாக வழியை நிறுவாமல் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் செய்த தவறால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போதும் பஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்படும் பாலத்தால் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்புகளே உள்ளது. வேப்பூர் கூட்டுரோடு பாலத்திலிருந்து, அரசு மேல்நிலைப் பள்ளி எதிரிலுள்ள பாலம் வரை சமதளமாக அமையும் வகையில் பாலம் அமைக்க வேண்டும்' என, தெரிவித்தார்.