ADDED : ஆக 16, 2024 06:10 AM
திட்டக்குடி: இறையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மயானபாதை பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையை கண்டித்து விருத்தாசலம் சப்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, கிராம மக்கள் அறிவித்தனர்.
இதுதொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாக பொது மேலாளர் மற்றும் இறையூர் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். அப்போது 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்திவரும் மயானம் மற்றும் மயானப்பாதையை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆலை துவங்கிய காலத்தில் தேவையான நிலத்தினை கிராம மக்கள் கொடுத்துள்ளனர். எனவே, மயானப்பாதைக்கு உரிய நிலத்தை ஒதுக்கித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மயானப்பாதையை வழக்கம்போல் தொடர்ந்து பயன்படுத்தவும், கிராம கணக்கில் திருத்தம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் புலத்தணிக்கை செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. இதையேற்று முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

