ADDED : ஜூலை 10, 2026 06:14 PM
மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் எழுத்தாளருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி இலக்கிய சங்கமம், பவர் சமூக இயக்கம், மக்கள் சேவை இயக்கம், நெய்வேலி நகர முத்தமிழ்ச்சங்கம் மற்றும் விருத்தாசலம் தமிழ்ப்பல்லவி இலக்கிய வட்டம் இணைந்து, தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாரதிகுமாருக்கு பாராட்டு விழா நடந்தது.
நெய்வேலி தமிழர் கலாசார சங்க அரங்கில் நடந்த விழாவிற்கு நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் மணவாளன், பாடகர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலையரசி வரவேற்றார்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைப்பட விமர்சனங்கள் மற்றும் சிறார் இலக்கியப் படைப்புகள் என பல்வேறு துறைகளில் பாரதிகுமார் சாதனை படைத்து வருவதை, சிறப்பு விருந்தினர்கள், பாராட்டி பேசினர்.
இவரது ‘கலகக்கார கலைஞர்கள்’ எனும் நுாலை, தமிழக அரசு சிறந்த நுாலாக தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் மாநில அளவிலான இலக்கிய போட்டிகளில் பல்வேறு விருதுகள் மற்றும் பரிசுகளை பெற்றுள்ளார்.
விழாவில் ஸ்ரீவித்யா நடராசன், கவிஞர் புலேந்திரன், நாடக கலைஞர் தாமரைச்செல்வன், பேச்சாளர் அங்குராஜ், தமிழ்ப்பல்லவி இதழாசிரியர் பல்லவிகுமார், சந்திரசேகரன் ஆகியோர் எழுத்தாளரை பாராட்டி ‘படைப்புச் சிகரம்’ விருது வழங்கினர்.
நிகழ்ச்சியை ராஜேஸ்வரன் தொகுத்து வழங்கினார்.இலக்கியச் சங்கமம் அமைப்பின் நிர்வாகி இராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். கலைமாமணி அய்யனார் நன்றியுரை வழங்கினார்.
