/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நில அளவைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
/
நில அளவைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 05, 2025 04:55 AM
கடலுார்: நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய பொது சேவை (இ-சேவை) மையங்களை அணுகி, விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நில உரிமையாளர்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர், நவம்பர் 20ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் வட்ட அலுவலகம் மற்றும் கட்டணம் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' என்ற சிட்டிசன் போர்ட்டல் மூலமாக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இச்சேவை தமிழகம் முழுவதும் பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய. பொது சேவை மையங்களை அணுகி, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, இச்சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.