/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி ஸ்ரீ.பி.முத்தையர் பள்ளியின் 27 வருட சாதனை பயணம்
/
பண்ருட்டி ஸ்ரீ.பி.முத்தையர் பள்ளியின் 27 வருட சாதனை பயணம்
பண்ருட்டி ஸ்ரீ.பி.முத்தையர் பள்ளியின் 27 வருட சாதனை பயணம்
பண்ருட்டி ஸ்ரீ.பி.முத்தையர் பள்ளியின் 27 வருட சாதனை பயணம்
ADDED : அக் 12, 2025 04:40 AM

பண்ருட்டியில் ஸ்ரீ.பி.முத்தையர் பள்ளி கடந்த 1901ம் ஆண்டு, முத்தையர் அவர்களால் திண்ணைப்பள்ளியாக துவங்கப்பட்டு, நடேசனின் அரிய முயற்சியால் துவக்கப்பள்ளியாக தொடர்ந்து, செல்வராஜின் நிர்வாகத்தின் கீழ் நடுநிலைப்பள்ளியாக வளர்ந்தது.
வாழ்வில் எளிமை, வறியோர்க்குப்பணி என்னும் முகவரியுடன் 1997ம் ஆண்டு இப்பள்ளி திருச்சி புனித அன்னாள் சபை அருட்சகோதரிகளின் சேவைக்கரங்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தொடர்ந்து, குற்றுயிராக இருந்த இப்பள்ளிக்கு புத்துயிர் அளித்து மாற்றுத்தாய் ஆயினர்.
வளர்ச்சி நோக்கிய பாதையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப் பள்ளியாகவும், 6 முதல் பிளஸ் 2 வரை மேல்நிலைப் பள்ளியாகவும் சீரமைத்தனர். இப்பள்ளியின் பாதை 27 ஆண்டைக்கடந்த நிறைவின் பாதையாக ஜொலிக்கிறது.
இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மதம், இனம், ஜாதி, மொழியைக் கடந்து மனிதனை, மாமனிதனாக மாற்றும் முயற்சிதான் இப்பள்ளியின் இலக்கு.
பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து வகை பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டு கல்வியின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. முழுமையான தொடர் மதிப்பீட்டுக்கல்வி முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளி மாணவர்கள் அறிவில் தெளிவு பெற்று திறன்களில் சிறந்தோங்கிட அரசு நிதியுதவியின் கீழ் 27 ஆசிரியர்களும், நிர்வாக உதவியின் கீழ் 59 ஆசிரியர்களும், அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்கு 20 பேர் என 106 பேர் பணிபுரிகின்றனர். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுயநிதி அடிப்படையில் இப்பள்ளி இயங்கி வருகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் ஆங்கிலவழிக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.
தற்போது தமிழ் வழியில் 2250 மாணவர்களும், ஆங்கில வழியில் 675 மாணவிகள் என 2925 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளும் உள்ளன. மிகவும் பின்தங்கிய வகுப்பு மாணவர்கள், பெற்றோர் இல்லா, ஒற்றை பெற்றோருடைய மற்றும் ஏழை மாணவரை கண்டறிந்து கல்விக்கட்டணம், சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் உணவு ஆகியவற்றுக்காக பள்ளி நிர்வாக நிதியிலிருந்து ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்காக அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா சலுகைகளும் பெற்றுத் தரப்படுகிறது. மேலும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை உடனுக்குடன் பெற்றுத்தர வழிவகை செய்யப்படுகிறது.
மாணவர்கள் இணைச்செயல்களில் ஈடுபடுத்தி அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர, தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், கணித மன்றம், வானவில் மன்றம், நுகர்வோர் மன்றம், சாரண சாரணியர் இயக்கம், இளஞ் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப்படை போன்ற செயல்பாடுகள் சிறப்பாக நடக்கிறது.
தலைமை ஆசிரியர் பெற்ற விருதுகள் தலைமை ஆசிரியர் பெர்ட்டில்லா நோபர்ட், கொரோனா காலத்தில் ஆசிரியர்களின் நலன்கருதி நிறைவான ஊதியம் வழங்கினார். ஏழை மாணவர்களின் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். கல்விப் பணியில் இவரது நிர்வாக திறமையைப் பார்த்து பண்ருட்டி ரோட்டரி சங்கம் கடந்த 2017ல் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. மேலும், 2018ல் நற்சேவகி விருதும் வழங்கப்பட்டது.
பள்ளியின் வளமையை மென்மேலும் வளர்ச்சியடைச் செய்ததால் ஐடியல் பிரின்ஸ்பல் விருது வழங்கப்பட்டது. இவரது இரக்க சேவையை பாராட்டி பண்ருட்டி திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் கருணை கடல் விருது வழங்கியது. 2024ல் புதுச்சேரி சபாநாயகம் செல்வம், மக்கள் சேவகர் விருது வழங்கினார்.
விளையாட்டில் பரிசு மழை கடந்த 2014ல் சேலத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பிளஸ் 2 மாணவி சுகன்யா, 8ம் வகுப்பு மாணவி தேன்மொழி மூன்றாமிடம் பிடித்தனர். 2015ல் சேலத்தில் நடந்த மாநில சிலம்பம் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 9ம் வகுப்பு சத்யா இரண்டாமிடம், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6ம் வகுப்பு எஸ்.சந்தியா இரண்டாமிடம், 6ம் வகுப்பு சந்தியா மூன்றாமிடம் பிடித்தனர்.
2016ல் சேலத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 7ம் வகுப்பு மாணவர் அருண்குமார் முதலிடம், 2017ல் நடந்த சிலம்பம் போட்டியில் 7ம் வகுப்பு மாணவர் சரண்ராஜ், 8ம் வகுப்பு மாணவர்கள் அருண்குமார், ஜெயப்பிரியா, பிளஸ் 1 மாணவி சத்யா மூன்றாமிடம் பிடித்தனர்.
சென்னையில் 2018ல் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பிளஸ் 2 மாணவி சத்யா முதலிடமும், 9ம் வகுப்பு ஜெயப்பிரியா, பாலாஜி இரண்டாமிடம் பிடித்தனர். 2019ல் தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் பிளஸ் 2 மாணவி தேன்மொழி மூன்றாமிடம், 2022ல் கர்நாடகாவில் நடந்த தேசிய அளவிலான டாட்ஜ்பால் போட்டியில் பிளஸ் 1 மாணவி யமுனா, கிருத்திகா, ஸ்ரீமதி இரண்டாமிடம் பிடித்தனர்.
மாணவர்களின் சாதனைகள் 2023ம் ஆண்டு மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் மாணவி ரிஷிகா முதலிடம் பெற்று 10 ஆயிரம் ரூபாயும், கவிதைப் போட்டியில் மாணவி தர்ஷினி மூன்றாமிடம் பிடித்து 5000 ரூபாய், மாணவி ரிஷிகா மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து 7,000 ரூபாய் பரிசு பெற்றனர்.
தொல்லியல் துறை சார்பில் தமிழ்ப் பண்பாட்டு பரவல் கட்டுரைப்போட்டியில் மாவட்ட அளவில் பிளஸ் 1 மாணவி ஹேமஸ்ரீ இரண்டாமிடம் பிடித்து 2000 ரூபாயும், கலைஞர் நுாற்றாண்டு விழா பண்பாட்டு பாசறை மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டியில் மாணவி ஹேமஸ்ரீ, மூன்றாமிடம் பிடித்து 5000 ரூபாயும், மாவட்ட அளவிலான கையெழுத்துப்போட்டியில் 9ம் வகுப்பு மாணவி அனுஷ்கா, இரண்டாமிடம் பிடித்து 2000 ரூபாயும் பரசு பெற்றனர்.
இதேபோன்று, மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் மாணவி கனிமதி ஓவியப்போட்டியில் இரண்டாமிடமும், மாணவி கனிஷ்கா மணற்சிற்பம் போட்டியில் மூன்றாமிடமும், மாணவி கனிமதி மெல்லிசைப்பாடல் போட்டியில் இரண்டாமிடமும், நாடகப்போட்டியில் இரண்டாமிடமும், செவ்வியல் நடனத்தில் முதலிடமும், கிராமிய நடனத்தில் முதலிடமும், மாணவி மதுமிதா தனிநடிப்பு பிரிவில் மூன்றாமிடமும், வில்லுப்பாட்டுக்குழு இரண்டாமிடம் பெற்று மாநில அளவில் செவ்வியல் நடனம் மற்றும் கிராமிய நடனப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
2024ம் ஆண்டில் மாவட்ட அளவில் 10ம் வகுப்பு மாணவி ஹேமஸ்ரீ கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து 5000 ரூபாயும், கையெழுத்துப்போட்டியில் பிளஸ் 1 மாணவி திக் ஷயா இரண்டாமிடம் பிடித்து 3000 ரூபாயும், 2025ம் ஆண்டு மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி ஹேமஸ்ரீ மூன்றாமிடம் பிடித்து 5000 ரூபாயும் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.