வாலிபரை வெட்டி செயின் பறிப்பு :கொள்ளையர்கள் 3 பேர் கைது
வாலிபரை வெட்டி செயின் பறிப்பு :கொள்ளையர்கள் 3 பேர் கைது
UPDATED : ஆக 31, 2026 08:05 PM
ADDED : ஆக 31, 2026 07:42 PM
நெய்வேலி: நெய்வேலியில் பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து கத்தியால் வெட்டி தங்க செயினை கொள்ளை அடித்த வழிப்பறி கும்பலை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் குமரன்,28; இவர், நேற்று முன்தினம் நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து தனது மாமா பைக்கில் வடலுாரில் உள்ள, மற்றொரு உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த 3 சவரன் செயின் மற்றும் மொபைல் போனை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, குமரன் கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது நெய்வேலி ஆர்ச்கேட் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற மூவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் நெய்வேலி அடுத்துள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த நவமணி மகன் ரவி கிருஷ்ணன்,26; ஜெயபால் மகன் தேவகிருஷ்ணன்,28; ஆறுமுகம் மகன் அர்ஜுனன்,30; என்பதும், மூவரும் குமரனை கத்தியால் வெட்டி செயின் மற்றும் மொபைல் போனை கொள்ளை அடித்து சென்றதை ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
